மேற்குவங்கம் மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. இதுவரை இந்தியாவில் 14,83,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனிடையே, ஜூலை 31ம் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில்,  மேற்கு வங்கத்தில் வருகிற ஜூலை 31ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் ஊரடங்கு இருக்கும் எனவும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று ஊரடங்கு இருக்காது என்று கூறியுள்ளார். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து செப்டம்பர் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.