சீனாவின் வூஹான் நகரில் உருவாகில் உலகளவில் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

கொரோனாவிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற, மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் சுயநலமின்றி, தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிவருகின்றனர். 

ஆனால் அப்படி தியாகவுள்ளமும் அர்ப்பணிப்புணர்வும் கொண்ட மருத்துவர்கள் தேசியளவில் பல இடங்களில் சரியான முறையில் நடத்தப்படுவதில்லை. சென்னையில் உச்சபட்சமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவரின் உடலை அடக்கம் செய்யக்கூட, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

உலகளவில் பேரழிவை ஏற்படுத்திவரும் பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களை காக்க சுயநலமில்லாமல் போராடும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவ பணியாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் முழுக்கவச உடை வழங்குவது, மாஸ்க்குகள் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் சில மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா நோயாளிகளுடனேயே இருக்கும் அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றுவது தடுக்க முடியாததாகிறது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலமாக சமூகத்திற்கோ, அவர்களது குடும்பங்களுக்கோ கூட கொரோனா பரவாமல் தடுப்பதை உறுதி செய்வதற்காக, மேற்கு வங்கத்தில் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் யாருமே அடுத்த 7 நாட்களுக்கு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கான உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்தித்தர மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அந்தந்த மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள ஹோட்டல்கள், விருந்தினர் விடுதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது மேற்குவங்க அரசு. 

கொரோனா தொற்று மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் அவர்களின் குடும்பத்திற்கோ மற்றவர்களுக்கோ பரவாமல் தடுப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் அலையாமல் தடுப்பதன் மன அழுத்தம், உடல் அலுப்பு ஆகியவற்றிலிருந்தும் அவர்களை காத்து, அவர்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை உதவும் என மேற்குவங்க அரசு நம்புகிறது.