மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தேபேந்திரநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஹேம்தாபாத் தனித் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றவர் தேபேந்திரநாத். இவர் தனது வீட்டில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எம்எல்ஏவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்து எம்எல்ஏ அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். மேலும், அப்பகுதி மக்கள் எம்எல்ஏவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே, எம்எல்ஏ தேபேந்திரநாத் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பாஜக கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும், மேற்குவங்க பாஜக எம்.எல்.ஏவின் மர்ம மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மம்தா பானர்ஜி அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியையும், குண்டர்கள் ராஜ்ஜியத்தையும் இது வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.