குஜராத் விமான விபத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ரூபானியின் ஆரம்பகால வாழ்க்கை
பாஜகவின் மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதலமைச்சருமான விஜய் ரூபானி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர் பட்டேல் உறுதி செய்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1956 ம் ஆண்டு பர்மாவில் பிறந்தார் விஜய் ரூபானி. பின்னர் அவரது குடும்பம் குஜராத்தின் ராஜ்கோட் பகுதிக்கு குடி பெயர்ந்தது. கல்லூரி காலத்திலேயே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (Abvp) மற்றும் ஜனசங்கம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
விஜய் ரூபானியின் அரசியல் பயணம்
1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்கோட் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அவர், 1996 ஆம் ஆண்டு ராஜ்கோட் மேயராகவும் பதவி வகித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு குஜராத் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், 2006 முதல் 2011 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு ஆனந்தி பென் படேலின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த அவர், 2016 ஆம் ஆண்டு குஜராத்தின் 16-வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சரான அவர் 2021 வரை குஜராத் முதலமைச்சராக பதவி வகித்தார்.
விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம்
இந்த நிலையில் லண்டனில் வசித்து வரும் தனது மகளைப் பார்ப்பதற்காக குஜராத்தில் இருந்து பிற்பகல் 1:30 மணிக்கு AI171 ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டார். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. விமானம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் மாணவர் விடுதியிலும் புகுந்தது. இதனால் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ஒருவர் உயிர்த்தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் ரூபானி உயிரிழப்பு
இந்த நிலையில் விமானத்தில் பயணித்த விஜய் ரூபானியின் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்து வந்தது. மாலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உயிரிழந்திருப்பதாக குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு இந்திய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
