குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 என்கிற விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவரைத் தவிர, அனைவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
குஜராத்தில் இன்று(ஜூன் 12) நடைபெற்ற விமான விபத்து உலகையே உலுக்கி உள்ளது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட போயிங் (787-8) விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மோகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர். மேலும் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் தனது மகளைப் பார்ப்பதற்காக லண்டனுக்கு புறப்பட்டார். விமான விபத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் 11A என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் உயிர் பிழைத்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை 300-ஐ தாண்டும்
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததுடன், பி.ஜே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் பயங்கரமாக மோதியுள்ளது. கட்டிடத்திற்குள் விமானம் நுழைந்த நிலையில் விமானத்தின் வால் பகுதி மட்டுமே வெளியில் தெரியும்படி காணப்பட்டது. மதிய நேரம் என்பதால் மாணவர்கள் விடுதிக்கு உணவருந்த வந்துள்ளனர். இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை பயிற்சி மருத்துவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்கள், குடியிருப்பு மற்றும் விடுதியில் உயிரிழந்தவர்கள் என உயிரிழப்பு 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்தவர்கள் விவரம்
விமானத்தில் இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஆகியோர் அடங்குவர். 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதிகள் விழுந்துள்ளதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விமானத்தில் 11A என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமாரைத் தவிர அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாஸ் விமானத்தின் அவசர கால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஏர் இந்தியா சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
குடியிருப்பு பகுதி, மாணவர் விடுதியில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து தெரிந்து கொள்ள சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி எந்த உதவிக்கும் 6357373831 மற்றும் 6357373841 என்ற இரண்டு எண்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான அனைத்து அப்டேட்டுகளும் https://www.airindia.com/ என்ற இணையதளத்திலும், ஏர் இந்தியாவின் எக்ஸ் தளப் பக்கத்திலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 1800 5691 444 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
