அவசர காலத்தில் விமானிகள் 'மேடே' என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிப்பது ஏன்?
குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பயணித்த 242 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குஜாரத்தில் நடந்த பயங்கர விமான விபத்து
குஜராத் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்திய விமானம் வெடித்து சிதறியது. 242 பேர் பயணித்த இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விமானம் விபத்திற்கு உள்ளாவதற்கு முன்னர் விமானிகள் ‘மேடே’(MayDay) என்கிற செய்தியை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் பதிலளிப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளானது. மேடே என்றால் என்ன? விமானிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் பிற குறியீடுகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மூன்று முறை உச்சரிக்கப்படும் ‘மேடே’
விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே ‘மேடே’ என்கிற வார்த்தையை உச்சரிப்பர். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்புச் சொல்லாகும். விமானி ஒருவர் ‘மேடே’ என்று உச்சரிக்கும் பொழுது அது மிகவும் தீவிரமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை குறிக்கிறது. விமானி ஒருவர் ‘மேடே’ என்று உச்சரித்தால் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அல்லது அருகில் உள்ள மற்ற விமானிகள் உடனடியாக அந்த அழைப்பிற்கு கவனம் செலுத்த வேண்டும். ‘மேடே’ என்ற வார்த்தை வேறு எந்த ஒலிகளுடனும் அல்லது உரையாடல்களுடனும் கலக்காத வகையில் தெளிவான அவசரகால செய்தியை வழங்குகிறது.
மேடே வார்த்தைக்கு முதல் முன்னுரிமை
விமானியிடமிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டவுடன் அவசர கால நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும். மீட்புப் பணிகள், உதவி நடவடிக்கைகள் விரைவாக ஒருங்கிணைக்கப்படும். இது பிரெஞ்சு வார்த்தையான M’aider (எனக்கு உதவுங்கள்) என்பதிலிருந்து பெறப்பட்டது. இது சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, உலகளாவிய அவசரகால அழைப்பாகும். மொழிகளைக் கடந்து எந்த நாட்டினராலும் இந்த அவசர அழைப்பு புரிந்து கொள்ளப்படும். இது SoS (Save Our Soul) என்கிற ஆங்கிலச் சொற்றொடரின் ஒரு வடிவமாகும். விமானிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது ‘மேடே’, ‘மேடே’, ‘மேடே’ என்று மூன்று முறை சொல்லி பின்னர் அவர்கள் தங்கள் விமானத்தின் அடையாளத்தையும் தெரிவித்து உதவி கோருவர். ‘மேடே’ என்று மூன்று முறை சொல்வதன் மூலம் தங்கள் உயிருக்கும் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதை உலகிற்கு காட்டி உடனடி உதவி பெறுவதே இதன் நோக்கமாகும்.
‘பான்-பான்’ (Pan-Pan) வார்த்தை
விமானமும் அதில் இருப்பவர்களும் மிகுந்த ஆபத்தில் இருக்கும் பொழுது உதாரணமாக என்ஜின் செயலிழப்பு, விமானம் கட்டுப்பாட்டை இழத்தல், தீ விபத்து, விமானம் உடனடியாக தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஆகிய சமயங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். இந்த அழைப்பு பெறப்பட்டால் மற்ற அனைத்து தகவல் தொடர்புகளையும் விட முதல் முன்னுரிமை இதற்கே அளிக்கப்படும். அதேபோல் ‘பான்-பான்’ (Pan-Pan) என்று கூறுவது விமானம் ஆபத்தில் உள்ளதை குறிக்கும். விமானத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலைகளில், ஆனால் உடனடி ஆபத்து இல்லாத போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். உதாரணமாக சிறிய இயந்திரக் கோளாறு, காலநிலை காரணமாக திசை திருப்ப வேண்டிய சூழல், மருத்துவ அவசர நிலை இருக்கும்பொழுது ‘பான்-பான்’ என்று மூன்று முறை உச்சரிக்கப்படும்.
நான்கு இலக்க குறியீடுகள்
இது மட்டுமல்லாமல் விமானிகள் தங்கள் விமானத்தின் ட்ரான்ஸ்பாண்டரில் சில குறிப்பிட்ட நான்கு இலக்க குறியீடுகளை உள்ளிடுவர். இதன் மூலம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தங்களின் அவசர நிலையை தெரிவிக்க முடியும். இவை காட்சி ராடாரில் தெளிவாக காட்டப்படும். 7700 என்கிற குறியீடு பொதுவான அவசரநிலை குறியீடாகும். ‘மேடே’ அல்லது ‘பான்-பான்’ அழைப்புகளுடன் அல்லது அந்த அழைப்புகளுக்குப் பதிலாக இந்த குறியீடு பயன்படுத்தப்படலாம். இது பொதுவான எந்த வகையான அவசர நிலைக்கும் பொருந்தும். 7600 ரேடியோ தகவல் தொடர்பு செயலிழப்பைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் குறியீடு ஆகும். அதாவது விமானத்தை ஓட்டுபவர் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் பேச முடியாத சூழ்நிலையைக் குறிக்கிறது.
மிக உயர்ந்த பாதுகாப்பு குறியீடு
7500 என்கிற குறியீடு விமானத்தை கடத்துவது அல்லது சட்டவிரோதமாக தலையீடு ஏற்பட்டால் அதை உணர்த்த பயன்படுத்தப்படும் குறியீடாகும். இது மிக உயர்ந்த பாதுகாப்பு குறியீடாகும். விமானிகள் முதலில் பறப்பது, விமானத்தை சரியான வழியில் செலுத்துவது, தகவல் தொடர்பு என முன்னுரிமை வரிசையை பின்பற்றுவார்கள். அதாவது முதலில் விமானத்தை கட்டுப்படுத்தி, அதை சரியான திசையை நோக்கி செலுத்தி, அதன் பிறகு தான் அவசர காலங்களில் தகவல்களை விமான கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிப்பர்.