தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர்.. குஜராத் முன்னாள் முதலமைச்சர்.. யார் இந்த விஜய் ரூபானி?
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமான விபத்தில் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் ரூபானி யார்? அவரின் பின்னணி என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

விஜய் ரூபானியின் ஆரம்ப கால வாழ்க்கை
ஆகஸ்ட் 2, 1956 பர்மாவின் ரங்கூன் நகரில் பிறந்தவர் விஜய் ருபானி. இவரது குடும்பம் 1960 இல் குஜராத்தின் ராஜ்கோட் பகுதிக்கு குடிபெயர்ந்தது. இவர் தர்மேந்திரசிங்ஜி கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டத்தையும், சௌராஷ்ட்ரா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். தனது கல்லூரி நாட்களிலேயே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP)/மற்றும் ஜன சங்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கினார். அவரது அரசியல் வாழ்க்கைக்கும் இது அடித்தளமாக அமைந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
விஜய் ரூபானியின் அரசியல் பயணம்
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் பவநகர் மற்றும் பூஜ் சிறைச்சாலைகளில் 11 மாதங்கள் வரை அடைக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு ராஜ்கோட் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1996 ஆம் ஆண்டு ராஜ்கோட் மேயராகவும் பதவி வகித்தார். 2006 ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியால் குஜராத் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றினார்.
குஜராத் முதலமைச்சரான விஜய் ரூபானி
2015 ஆம் ஆண்டு ஆனந்தி பென் படேல் முதலமைச்சரான நிலையில், அவரது அமைச்சரவையில் போக்குவரத்து, தொழிலாளர் நலன், குடிநீர் விநியோகம் ஆகிய பொறுப்புகளை வகித்தார். அமைச்சராக பதவி ஏற்ற ஐந்து மாதங்களிலேயே குஜராத் மாநில பாஜக தலைவர் ஆகவும் உயர்ந்தார். குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் குஜராத்தின் 16-வது முதலமைச்சராக விஜய் ருபானி பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வராக இருந்தபோது விஜய் ரூபானி செய்த சாதனைகள்
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். செப்டம்பர் 2021 வரை முதல்வராக பதவி வகித்த அவர், சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்த நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 4 வருடங்களே ஆட்சி செய்த போதிலும் தனது ஆட்சி காலத்தில் அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். 6000 கிராமங்களை டிஜிட்டல் ஹைவே உடன் இணைந்தது, உஜாலா யோஜனா திட்டத்தை குஜராத்தில் அமல்படுத்தி, எல்இடி பல்புகளின் விலையை கணிசமாக குறைத்தது, எல்இடி டியூப் லைட் மற்றும் மின்விசிறியின் விற்பனையை அதிகரித்தது, ராஜ்கோட்டை தொழில் மையமாக உருவாக்கியது ஆகியவை அவர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் ஆகும்.
மகளைப் பார்ப்பதற்காக லண்டன் பயணம்
முதலமைச்சராக இருந்த ரூபானி பட்டித்தார் சமூகத்தின் போராட்டத்தை கட்டுப்படுத்தினார். அனைத்து சாதியினரிடமும் பேதமின்றி ஒற்றுமையை பேணுவதில் முக்கிய பங்காற்றினார். ஜெயின்-பனியா சமூக பின்னணி கொண்டவர் என்பதால் சௌராஷ்டிரா பகுதியில் செல்வாக்குடன் விளங்கினார். தனது சிறந்த நிர்வாக மற்றும் அரசியல் திறமையால் குஜராத் அரசியலில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். விஜய் ரூபானியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு அஞ்சலி ரூபானி என்கிற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் சமண மதத்தை சேர்ந்தவர் ஆவார். லண்டனில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் லண்டனுக்கு புறப்பட்டார்.
விமான விபத்தில் உயிரழந்த விஜய் ரூபானி
இவர் சென்ற விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலேயே வெடித்துச் சிதறியது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்தனர். விபத்திலிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட விஜய் ரூபானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.