மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை, மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மதிமுக பொது செயலாளர் வைகோ, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைநேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையை கடந்து சென்றது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சேதமானதால், அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

இதைதொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ரூ.500 கோடி நிவாரண நிதி ஒதுக்கியுள்ளார். மேலும், மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வைகோ மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தை தடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.