இண்டிகோ விமான சேவைகள் சமீபத்திய நெருக்கடிக்குப் பிறகு மீண்டும் சீரடைந்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பெர்ஸ் அறிவித்துள்ளார். பயணிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இண்டிகோ பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை சீரடைந்து விட்டதாக தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ் அறிவித்துள்ளார். இதனிடையே, செவ்வாய்க்கிழமை மக்களவையில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாட்டு நெருக்கடி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
'இண்டிகோ மீண்டும் இயங்கத் தொடங்கியது'
இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பெர்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள வீடியோவில் விமான சேவையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது பற்றிப் பேசியுள்ளார். "அண்மைக் கால நெருக்கடிக்குப் பிறகு, விமான நிறுவனம் மீண்டும் நிலைத்துவிட்டது என்றும், செயல்பாடுகள் சீராகிவிட்டன" என்று அவர் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதாகவும், மேலும் தினசரி அடிப்படையில் தொடர்ந்து அதைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையங்களில் சிக்கியிருந்த பெரும்பாலான உடமைகள் பயணிகளின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன என்றும், வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் தொடர்ந்து பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
"நேற்று நிலவரப்படி, எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 இடங்களுக்கும் மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கிவிட்டோம். இதற்குக் காரணமான உள்விவகாரங்கள் குறித்தும், நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று எல்பெர்ஸ் கூறினார்.
மத்திய அரசின் நடவடிக்கை
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இண்டிகோவின் செயல்பாட்டு நெருக்கடிக்கு அந்நிறுவனம் 'பொறுப்பேற்க' வேண்டும் என்று கூறினார். "எந்தவொரு விமான நிறுவனமும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பயணிகளுக்கு இன்னல்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்று மக்களவையில் வலியுறுத்தினார். இண்டிகோவின் சேவைகள் வேகமாகச் சீராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியும் நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவை ரத்து காரணமாக ஏற்பட்ட குழப்பம் குறித்துக் கவலை தெரிவித்தார். "விதிகளும் சட்டங்களும் அமைப்பைச் சீர்திருத்தவே தவிர, மக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல" என்று அவர் குறிப்பிட்டார்.


