பாகிஸ்தானின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள அசிம் முனீர், இந்தியாவுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும், பாகிஸ்தானின் பதில்  தீவிரமாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட முப்படைத் தலைமைத் தளபதியுமான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் பாகிஸ்தானில் ஏதாவது ஆக்கிரமிப்பும் நடந்தால், பாகிஸ்தானின் பதில் முன்னெப்போதையும் விட வேகமானதாகவும், கடுமையானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்குக் கடுமையான எச்சரிக்கை

பாகிஸ்தானின் முப்படைகளுக்கும் தலைமைப் பொறுப்பேற்றுள்ள அசிம் முனீர், தனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற ஒரு விழாவில் ஆயுதப்படை அதிகாரிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

"எந்தவொரு மாயையிலும் இந்தியா இருக்கக் கூடாது. (எதிர்காலத்தில்) எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும், பாகிஸ்தானின் பதில் மிகவும் வேகமானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும்," என்று அவர் கூறினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நான்கு நாட்கள் நீடித்த மோதல்கள், மே 10 அன்று இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒரு புரிதலுடன் முடிவடைந்தன. அசிம் முனீர் இந்தப் பின்னணியிலேயே தனது எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று கூறிய முனீர், இஸ்லாமாபாத்தின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையைச் சோதிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

முனீர் அதிகார உயர்வு

அசிம் முனீர் கடந்த வாரம் முப்படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டு, ஐந்து ஆண்டு காலப் பதவிக்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, நாட்டின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். அவர் ஒரே நேரத்தில் ராணுவத் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றுவார்.

இந்த CDF பதவி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகள் மீதான முனீரின் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதுடன், நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்குகிறது. இதன் மூலம், முனீர் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத் தலைவராக உருவெடுத்துள்ளார்.