மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திறன்களை மேம்படுத்துவதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார். இது ஆசியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீடாகும்.

சத்யா நாதெல்லாவின் வாக்குறுதி

பிரதமரைச் சந்தித்த பிறகு சத்யா நாதெல்லா தனது சமூக ஊடகப் பதிவில், "இந்தியாவின் AI வாய்ப்பு பற்றி உத்வேகம் அளிக்கும் உரையாடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆசியாவில் நாங்கள் செய்யும் முதலீடுகளிலேயே மிகப் பெரியதாக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உறுதி அளித்திருக்கிறோம்." என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்கையில், "AI என்று வரும்போது, உலகமே இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது!" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், "திரு. சத்யா நாதெல்லாவுடன் மிகவும் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் தனது மிகப் பெரிய முதலீட்டை இந்தியாவில் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதுமைகளைப் புகுத்தி, சிறந்த உலகத்தைப் படைப்பதற்கு AI ஆற்றலைப் பயன்படுத்துவார்கள்," என்று கூறினார்.

கிளவுட் மற்றும் AI கட்டமைப்பு விரிவாக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின்படி, இந்த 17.5 பில்லியன் டாலர் முதலீடானது, அடுத்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

இதற்கு முன், பெங்களூருவில் கிளவுட் மற்றும் AI உள்கட்டமைப்பை நிறுவுவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இதில், திறன் மேம்பாடு மற்றும் புதிய தரவு மையங்களை நிறுவும் திட்டமும் அடங்கும்.

மொத்தமாக, நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் முதலீடு வருவது இந்தியாவை உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க சந்தையாக நிலைநிறுத்த உதவும்.

பிற நிறுவனங்களின் முதலீடுகள்

இந்தியாவில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு மைக்ரோசாப்ட்டின் இந்த முதலீடு குறிப்பிடத்தக்கதாகும்.

கூகுள்: கடந்த அக்டோபரில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தங்கள் செயற்கை நுண்ணறிவு மையத்தை (AI hub) அமைப்பதற்கான திட்டங்களைப் பகிர்ந்துகொண்டார். இது அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கும் மிகப்பெரிய டேட்டா சென்டராக இருக்கும். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அமேசான்: அமேசான் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தரவு மையங்களை உருவாக்கப் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

குவால்காம்: செமிகண்டக்டர்கள் தயாரிப்பு நிறுவனமான குவால்காமின் CEO, கிறிஸ்டியானோ ஆர் அமோனையும் பிரதமர் மோடி அக்டோபரில் சந்தித்து, இந்தியாவில் AI, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாடு குறித்து விவாதித்தார்.