ஜப்பானின் ரகுடென் நிறுவனம் இந்தியாவில் ரூ.800 கோடி முதலீடு செய்யவும், 8% பணியாளர்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், சிக்ஸ்த்சென்ஸ் தளத்தை விரிவுபடுத்தவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

ஜப்பானின் ரகுடென் நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் குறைந்தது 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து, அதன் உலகளாவிய செயல்பாடுகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையையும் 8% அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது என அந்நிறுவனத்தின் உயர் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பணியமர்த்தலை அதிகரிக்க குறைந்தது 100 மில்லியன் டாலர் (சுமார் 800 கோடி ரூபாய்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ரகுடென் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் கோபிநாத் கூறியுள்ளார்.

நிதி தொழில்நுட்பம், மின் வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் செயல்படும் ரகுடென் நிறுவனம், வணிக கருவிகள், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பணியாளர் உற்பத்தித்திறன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயல்பாடுகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

4,000 பேருக்கு வேலைவாய்ப்பு:

ரகுடென் தற்போது இந்தியாவில் 4,000 பேரைப் பணியமர்த்துகிறது. அவர்களில் 90% பேர் தொழில்நுட்ப ஊழியர்கள். AI தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்துபவர்களை அதிகமாக பணியில் சேர்க்க உள்ளது எனவும் கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் முக்கிய கட்டண செயலியான ரகுடென் பே மற்றும் அதன் சிக்ஸ்த்சென்ஸ் தளத்தை உருவாக்குவதில் இந்திய உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre) முக்கிய பங்காற்றி வருகிறது. இது ஒரு அமைப்பைக் கண்காணிக்கவும் சிக்கல்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.

"இது (சிக்ஸ்த்சென்ஸ்) கிட்டத்தட்ட ஷெர்லாக் ஹோம்ஸைப் போன்றது. என்ன நடந்தது என்பதை தானாகவே கண்டுபிடிக்க முடிகிறது. எனவே, நடப்பதற்கு முன்பே பிரச்சினையை கணிக்கவும் அதற்கு ஏற்ப திட்டமிடவும் முடியும்" என்று கோபிநாத் சொல்கிறார்.

இரட்டிப்பு லாபம் ஈட்டும் இலக்கு:

வங்கிகள், சுகாதார நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்கள் சிக்ஸ்த்சென்ஸ் தளத்தை பயன்படுத்துகின்றனர். இந்திய அரசு இதனைப் பயன்படுத்துகிறது. 

2024 நிதியாண்டில் AI ஐப் பயன்படுத்தி ரகுடென் 10.5 பில்லியன் யென் ($73.62 மில்லியன்) லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளது.

ரகுடென் இந்தியா நாட்டின் பல இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. பெங்களூருவில் இரண்டு அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ரகுடென் இந்தியாவின் தலைமையகமாகவும் உள்ளது.