உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் மருத்துவமனையில் 30 குழந்தைகள் பலியானது தொடர்பாக அங்கு பணியாற்றிய டாக்டர் கபீல் கானை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 12-ந்தேதி ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் முகவர்களுக்கு பல மாதங்களாக நிலுவை பணத்தை செலுத்தவில்லை என்பதால் ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பாத காரணத்தால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், அங்குள்ள குழந்தைகள் நல வார்டில் 100 படுக்கைகளுக்கும் பொறுப்பாளராக டாக்டர் கபீல் கான் இருந்து வந்தார். இந்த துயர சம்பவம் நடந்தபின், டாக்டர் கபீல் கான் ,இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகளை இறந்தனர் என்பதை மறுத்த ஆளும் பா.ஜனதா அரசு, குழந்தைள் இறப்பு குறித்து விசாரணை நடத்த  தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இதனிடையே, அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் ராஜீவ் சுக்லா, அவரின் மனைவி பூர்ணிமா சுக்லா இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும், குழந்தைகள் இறப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கடந்த 29-ந்தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்பின், இந்த சம்பவம் நடந்தபோது, பணியில் இருந்த டாக்டர் கபீல் கானையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். மேலும், குழந்தைகள் இறந்தது தொடர்பாக போலீசாரின் முதல்தகவல் அறிக்கையில் 9 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவர்களில் டாக்டர் கபீல் கான், மயக்கவியல் மருத்துவர் சதீஸ், மருந்தாளுநர் ஜெய்ஸ்வால், கணக்காளர் சுதிர் பாண்டே, துணை கிளார்க் சஞ்சய் குமார் திரிபாதி, ஆக்சிஜன் சப்ளையர் உதய் பிரதாப் சிங், மணிஷ் பண்டாரி ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வௌிவரமுடியாத பிடிவாரண்ட்டை நேற்றுமுன்தினம் கூடுதல் நீதிபதி சிவானந்த் சிங் பிறப்பித்தார்.

அதன்அடிப்படையில் டாக்டர்  கபீல்கான் நேற்று கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது, ஊழல் தடுப்புச்சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.