Uttra pradesh election
உத்தரப்பிரதேச 6-வது கட்ட தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு
உத்தரப் பிரதேசத்தில் 49 தொகுதிகளுக்கு நேற்று நடந்த 6-வது கட்ட தேர்தில் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
7 மாவட்டங்கள்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று மாவ், மகராஜ்கஞ்ச், குஷிநகர், கோரக்பூர், தியோரியா, ஆசம்கர் மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
முலாயம் தொகுதி
இந்த தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 94.60 லட்சம் மற்றும் பெண் வாக்காளர்கள் 77.84 லட்சம் என மொத்தம் 1.72 வாக்காளர்கள் உள்ளனர். 49 தொகுதிகளில் 635 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் பெண்கள் மட்டும் 63 பேர். இந்த 49 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மக்களவை உறுப்பினர் தொகுதியான ஆசம்கரில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
நேபாள எல்லை
தேர்தலையொட்டி துணை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக நேபாள எல்லையை ஒட்டியுள்ள மகராஜ்கஞ்ச், கோரக்பூர் ஆகிய இடங்களில் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதேபோன்று நேபாள எல்லையை ஒட்டியுள்ள உத்தரப்பிரதேச கிராமங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து மகராஜ்கஞ்ச் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரேந்திர குமார் கூறுகையில், ‘84 கிலோ மீட்ட நீளமுள்ள இந்திய - நேபாள எல்லை சீல் வைக்கப்பட்டு துணை ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். அவசரத் தேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் கண்காணிப்புக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டன’ என்றார்.
பலத்த பாதுகாப்பு
வாக்குப்பதிவை முன்னிட்டு 10 ஆயிரத்து 820 வாக்கு மையங்களும், 17 ஆயிரத்து 926 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
வாக்கு சதவீதம் உயர்வு
இதன் பின்னர் மாநில தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘57.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகுந்த அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது’ என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2012-ல் இதே 49 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 55.04 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது வாக்குப்பதிவு 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
2012-ல் நடைபெற்ற தேர்தலின்போது இந்த 49 தொகுதிகளில் சமாஜ்வாதி 27 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 9 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
