ஜூன் 22ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22ஆம் தேதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிரதமர் மோடி ஜூன் 22, 2023 அன்று அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்குச் செல்ல உள்ளதாகவும் அவருக்கு அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் விருந்தளிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது பிரதமர் மோடியின் முதல் அரசு பயணமாகும். இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளிலும் அரசு விருந்திலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
மோடி பிரதமரான பிறகு பல முறை அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவை பெரும்பாலும் உத்தியோகபூர்வமான பயணங்களாக இருந்தன. இதற்கு முன் நவம்பர் 2009 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
அதற்குப் பின் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடர் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரானை அரசுமுறைப் பயணமாக வரவேற்று விருந்தளித்தார். அதுவே பைடன் பதவியேற்றதும் வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்த ஒரே அரசு விருந்து ஆகும்.
அதனை அடுத்து பிரதமர் மோடியின் பயணம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான நட்பின் பிணைப்பை உறுதிப்படுத்துவதாக அமைய உள்ளது.
"இந்தப் பயணத்தில் பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் கூட்டான செயல்பாட்டை வலுப்படுத்தும்" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் கூறினார்.
பிரதமர் மோடியும் பிடனும் கல்வி பரிமாற்றம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்கள். இதற்கு முன் இந்தோனேசியாவில் நடந்த சந்திப்பில், பிரதமர் மோடியும் ஜோ பைடனும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பற்றி ஆலோசித்தனர்.
இதற்கு முன் பிரதமர் மோடி செப்டம்பர் 23, 2021 அன்று அமெரிக்கா சென்றிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.
Karnataka Election: கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்