ஜவுன்பூரில், சொத்துத் தகராறு மற்றும் கலப்புத் திருமணப் பிரச்சனையால் பெற்றோரைக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையை மறைக்க, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜவுன்பூரில், சொத்துத் தகராறு மற்றும் கலப்புத் திருமணப் பிரச்சனை காரணமாக பெற்றோரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய பொறியியல் பட்டதாரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜவுன்பூரின் அகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் பகதூர் (65) மற்றும் அவரது மனைவி பபிதா (63). கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இவர்களைக் காணவில்லை என இவர்களது மகள் வந்தனா டிசம்பர் 13-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், இவர்களது மகன் அம்பேஷ் (30) என்பவரே இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது அம்பலமானது.

கலப்புத் திருமணம்

அம்பேஷ் கொல்கத்தாவில் பணிபுரிந்தபோது ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவரது பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்காமல், மனைவியைப் பிரிந்து வருமாறு அம்பேஷை வற்புறுத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையில், அம்பேஷின் மனைவி அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். இது தொடர்பாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இரட்டைக் கொலை

டிசம்பர் 8-ம் தேதி ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அம்பேஷ், தனது தாய் பபிதாவை இரும்புத் தடியால் தலையில் அடித்துக் கொன்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை ஷியாம் பகதூரைத் தாக்கி, கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்த மின்சாரக் ரம்பத்தைப் பயன்படுத்தி இருவரது உடல்களையும் தலா மூன்று துண்டுகளாக வெட்டியுள்ளார். ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு, உடல் பாகங்களை சிமெண்ட் மூட்டைகளில் கட்டித் தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

பெருமளவிலான உடல் பாகங்களைக் கோமதி ஆற்றிலும், மூட்டையில் அடங்காத ஒரு பாகத்தைச் சாய் ஆற்றிலும் வீசியுள்ளார்.

காவல்துறையின் அதிரடி

பின்னர், தாய் தந்தை இருவரும் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையின்போது அம்பேஷின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

"குற்றம் நடந்த இடத்திற்கு அம்பேஷை அழைத்துச் சென்றோம். இதுவரை ஒரு உடல் பாகம் மீட்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களைத் தேடும் பணியில் நடக்கிறது" என மூத்த காவல்துறை அதிகாரி ஆயுஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஜவுன்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.