மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதேபோல், ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். சிலர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில்;- நேற்று நான் பலவீனமாக உணர்ந்ததைத் தொடர்ந்து மருத்துவரை அணுகினேன். அங்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரின் ஆசீர்வாதங்கள், நல்வாழ்த்துக்களுடன் இப்போது நலமாக இருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி துவங்கிய நிலையில், அப்போது எடுக்கப்பட்ட சோதனை முடிவில் 17 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர்களால் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் உண்டானது. அந்த சமயத்தில் நிதின் கட்கரிக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. நாக்பூரில் எடுக்கப்பட்ட சோதனை முடிவில்தான் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14ம் தேதி அவை நடவடிக்கைகளில் நிதின் கட்கரி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.