மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சகோதரி காலமானார்!
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜூபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். அவருடைய வயது 65க்கு மேலிருக்கும் என தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஜூபென், தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இதனிடையே, அவரது உடல் நிலை மோசமானதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
சகோதரியின் மறைவையடுத்து, குஜராத்தில் நடைபெறவிருந்த இரண்டு பொது நிகழ்ச்சிகளை அமித் ஷா ரத்து செய்துள்ளார். “தனது மூத்த சகோதரி இறந்ததைத் தொடர்ந்து, அமித் ஷா தனது அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.” என பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அமித் ஷாவின் மூத்த சகோதரியான ராஜூபென் என்ற ராஜேஸ்வரி பென்னின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் தால்தேஜ் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான அமித் ஷா மகர சங்கராந்தியைக் கொண்டாடும் பொருட்டு நேற்று முதல் அகமதாபாத்தில் இருக்கிறார். தனது சகோதரி இறப்பு செய்தி அறிந்து தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த அவர், உடனடியாக மும்பை புறப்பட்டு சென்றார்.
வீட்டு வாசலில் புதுப்பானையில் பொங்கலிட்ட சசிகலா!
குஜராத் மாநிலத்ஹ்டில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பனாஸ் டெய்ரி மற்றும் காந்திநகரில் உள்ள ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமித் ஷா திட்டமிட்டிருந்தார். பனாஸ் டெய்ரியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் தயாரிப்புகளை தொடங்கி வைப்பதாகவும், காலையில் ஒரு பொது நிகழ்ச்சியில் அமித் ஷா உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனஸ்கந்தா நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான குஜராத் மாநில கூட்டுறவு வங்கி லிமிடெட் தலைவர் அஜய் படேல், தனது மூத்த சகோதரியின் மரணம் காரணமாக அமித் ஷாவால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறினார்.