சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை 30 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்தும் கூட, இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933ஆக அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்தை எட்டப்போகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வராததால், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடர்ந்து தாறுமாறாக எகிறிக்கொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 2 நாட்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் வெறும் 69 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஓரளவுக்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 

மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தேசிய அளவில் 170 மாவட்டங்களை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கண்டறிந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் 22 தமிழ்நாட்டு மாவட்டங்களும் அடக்கம். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சுத்தமாக இல்லை என தெரிவித்தார்.

மேலும் கொரோனாவை இந்தியாவிலிருந்து விரட்டும் நடவடிக்கையில், கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது என்று தெரிவித்தார்.

எனவே நாட்டு மக்கள், மே 3ம் தேதி வரையிலான ஊரடங்கை கடுமையாக பின்பற்றி சமூக விலகலை கடைபிடித்தால், கொரோனாவை விரட்டி அதற்கெதிரான போரில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் ஊரடங்கை பின்பற்றி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.