டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசு தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மேலும் டெல்லி அரசும் முறையீடு செய்திருந்தது. குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனுவைப் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், " குற்றவாளிகள் 4 பேருக்கும் ஒரே குற்றத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆதாலால், தனித்தனியாக தண்டனையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை" எனக் கூறி மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், டெல்லி அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்துள்ளன