இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.  மே மாத இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே 2 கட்ட தளர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பயணம் மேற்கொள்ள இ பாஸ் வாங்குவது கட்டாயமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் ஒன்று முதல், தனிநபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் யோகா பயிற்சி கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை திறக்கலாம் எனவும், தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றுக்கான தடை நீடிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்கப்படமாட்டாது எனவும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால், சுதந்திர தினத்தை தனிமனித இடைவெளியை பின்பற்றி கொண்டாடலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.