பெங்களூருவில் மழைநீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால், மழையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இறந்தவர்கள் மன்மோகன் காமத் (63), மற்றும் தினேஷ் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பி.டி.எம் 2வது ஸ்டேஜ் அருகே உள்ள என்.எஸ். பால்யாவில் உள்ள மதுவன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் காமத், மாலை 6.15 மணியளவில் இடைவிடாத மழையின் போது பாதாள அறையில் தேங்கி இருந்த தண்ணீரை சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.
அவர் ஒரு மோட்டாரைக் கொண்டு வந்து, அதை சாக்கெட்டுடன் இணைத்து, தண்ணீரை பம்ப் செய்ய முயன்றபோது, ஒரு ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்சாரம் தாக்கி இறந்தார்.
அதே நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரின் மகன் தினேஷும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இயற்கைக்கு மாறான மரண அறிக்கைகள் (UDR) பதிவு செய்யப்படும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
