இலங்கை அகதியின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்தியா உலகெங்கிலும் இருந்து வரும் அகதிகளுக்கு தர்மசாலை போன்ற இலவச தங்குமிடம் அல்ல என்று தெரிவித்துள்ளது. 140 கோடி மக்களுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உலகெங்கிலும் இருந்து வரும் அகதிகளுக்கு இந்தியா தர்மச் சத்திரம் போன்ற இலவச தங்குமிடம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. புகலிடம் கோரி இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இதனைக் கூறியுள்ளது. அவரது புகலிடக் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
அவர் இலங்கையைச் சேர்ந்த, இந்தியாவால் தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர் எனச் சந்தேகிக்கப்பட்டு 2015 இல் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் புகலிடம் கோரிய அவரது மனுவை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
2018ஆம் ஆண்டில், விசாரணை நீதிமன்றம் அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை ஏழு ஆண்டுகளாகக் குறைத்தது, ஆனால் அவரது தண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறி, நாடுகடத்தும் வரை அகதிகள் முகாமில் தங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் தான் விசாவில் இந்தியாவுக்கு வந்ததாகவும், தனது சொந்த நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். தனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் வசித்து வருவதாகவும், தான் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருப்பதாகவும், நாடு கடத்தும் செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி தத்தா, "உலகெங்கிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்வதா? நாங்கள் 140 கோடி மக்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். இது உலகெங்கிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை வரவேற்கக்கூடிய தர்மச் சத்திரம் அல்ல" என்று குறிப்பிட்டார்.
மனுதாரரின் வழக்கறிஞர் அரசியலமைப்பின் 21வது பிரிவு மற்றும் 19வது பிரிவின் கீழ் இந்த விஷயத்தை வாதிட்டார். அதற்கு, 19வது பிரிவு இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் "இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்றும் நீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது.
மனுதாரர் ஒரு அகதி என்றும் இலங்கையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் வலியுறுத்தினார். அதற்கு நீதிமன்றம், மனுதாரர் வேறொரு நாட்டிற்குச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியது.
