புதுடெல்லி, அக். 13:-

ரெயில் பயணிகள் தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை ஆர்டர் செய்தால், அடுத்த ரெயில் நிலையத்தில் சுடச்சுட உணவு வழங்கும் திட்டத்தை ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ரெயிலில் நீண்டதொலைவு பயணம் செய்பவர்கள், சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை, ரெயில்வே உணவாகும். தங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்டு பெரிய சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில், நடப்பு ரெயில்வே பட்ஜெட்டில், தனியார் ஓட்டல்களில் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்து பயணிகள் சாப்பிடும் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் கொண்டு வந்தது. இதற்காக பல தனியார் உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, கே.எப்.சி. பிரைடு சிக்கன் முதல் டோமினோஸ் பீட்சா வரை, உள்ளூர் உணவுகள் வரை ரெயில் பயணிகள் விரும்பி சாப்பிடும் அனைத்தையும் ஆர்டர் செய்துவிட்டு, அடுத்த ரெயில் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

முதல்கட்டமாக குறிப்பிட்ட வழித்தடங்களில், நீண்ட தொலைவு செல்லும் ரெயில்களில் மட்டும் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டத்தில், ரெயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. செல்போன் ஆப்ஸை பயன்படுத்தி உணவுகளை ஆர்டர் செய்து பயன்பெறலாம்.

இனி அடுத்த முயற்சியாக ‘பேஸ் கிட்சன்’ எனும் திட்டத்தை செயல்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, ரெயில்வே நிலையத்தில் பிரபல ஓட்டல்களின் சமையல் கூடம் நிறுவ அனுமதிக்கப்படும். அங்கு அவர்கள் உணவு ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை சுடச்சுட தயார் செய்து வழங்குவார்கள்.