லக்னோவில் இன்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் பேரணியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தள்ளுமுள்ளுவில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திட்டமிட்டு கட்சிப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள கான்சிராம் நினைவு நாளையொட்டி டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் இன்று பொதுக்கூட்டம், பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.

அப்போது, கட்சித் தலைவர் மாயாவதி, பேசுவதற்காக மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேறிச் செல்ல தொண்டர்கள் முயன்றனர். அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பெண்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் மிதிப்பட்டு காயமடைந்தனர்.
அந்த கூட்டத்துக்குள் ஆம்புலன்சுகளும் வரமுடியாத தால், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால், கூட்டநெரிசலில் யாரும் இறக்கவில்லை. கடும் வெப்பம், காரணமாக 2 பேர் இறந்தனர் என கட்சியின் மாநிலத் தலைவர் ராமாச்சல் பாஹர் தெரிவித்துள்ளார்.
