கிரேட் எஸ்கேப்……அதிபர் டிரம்ப்….செனட் அவை விசாரணையில் அமெரிக்க அதிபர் பதவி தப்பியது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செனட் அவையில் தோல்வியடைந்ததால் அதிபர் டிரம்ப் பதவி தப்பியது, அவர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிபர் டிரம்ப் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடன் போட்டியிடலாம் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

தனது வெற்றியை உறுதி செய்வதற்காக ஜோ பிடன் உக்ரைனில் நடத்திவரும் பல்வேறு நிறுவனங்களில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி அவரிடம் விசாரணை நடத்துமாறு  உக்ரைன் அரசை டிரம்ப் வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் ஜோ பிடன் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர் திட்டமிட்டார்

இந்த விவகாரம் வெளியே கசிந்ததில் அதிபர் டிரம்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டார் எனக் குற்றம்சாட்டி அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினர் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், செனட் அவையில் இதேபோன்ற தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்தில் டிரம்ப் தோல்வி அடைந்தால் அதிபர் பதவியை இழக்க நேரிடும் சூழல் இருந்தது.

ஆனால், அதிகாத்தை தவறாகப்பயன்படுத்திய முதல் குற்றச்சாட்டில் டிரம்ப்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், டிரம்ப்புக்கு எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரண்டாவது குற்றச்சாட்டு மீதான வாக்கெடுப்பிலும், 53-47 என்றே உறுப்பினர்கள் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் அதிபர் டிரம்ப் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.