கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல்  பொது முடக்கம் அமலில் இருப்பதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சரக்கு ரயில் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரயில் சேவை ரத்து தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே, கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே சில முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 30ம் தேி வரை பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில் சேவைகள் கிடையாது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.