இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனாவை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவை விரைவில் தெரிந்துகொள்ளும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கி இந்தியாவில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. கொரோனாவால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே பாதிப்பு எண்ணிக்கை 15712லிருந்து 16116ஆக அதிகரித்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 507ஆக இருந்த பலி எண்ணிக்கை 519ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஏற்கனவே 2231 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்த நிலையில், கூடுதலாக 70 பேர் குணமடைந்திருப்பதாகவும், அதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2301ஆக அதிகரித்துள்ளது. 

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 365 பேரும் கேரளாவில் 255 பேரும் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே பாதிப்பு  அதிகமாகவுள்ள அந்த மாநிலங்களிலும் கொரோனா கட்டுக்குள் வந்தால், தேசியளவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும். 

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3600க்கும் அதிகமானோரும், டெல்லியில் 1893 பேரும் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.