கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அங்கு செல்ல அனுமதித்து உச்ச நீதிமன்றம்  கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இதற்கு அய்யப்ப பக்தர்களும், பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற சில இளம்பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

அய்யப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. கோவிலுக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இளம்பெண்கள் வந்தால் தடுத்து நிறுத்துவதற்காக அய்யப்ப பக்தர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு கருதி சபரிமலையில் கடந்த 16-ந் தேதி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.  இந்த சூழலில், நேற்று மனிதி என்ற பெண்கள் அமைப்பைச்சேர்ந்த இளம்பெண்கள் சிலர் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயற்சித்தனர். ஆனால், சென்னை பெண்கள் சபரிமலைக்கு செல்ல இருப்பதை அறிந்த அய்யப்ப பக்தர்கள் ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து அவர்களுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பெண்களை தொடர்ந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்தும், போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரிலும் சென்னை பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லும் தங்கள் முடிவை கைவிட்டனர். பின்னர் போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றி தமிழக எல்லை வரை கொண்டு வந்து பாதுகாப்பாக விட்டு விட்டு திரும்பிச் சென்றனர்.இந்த சம்பவத்தின் காரணமாக பம்பையில் நேற்று அதிகாலை முதல் மதியம் 1 மணி வரை பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை கேரளாவைச்சேர்ந்த 2 பெண்கள் சபரிமலைக்கு கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை அப்பச்சிமேடு என்ற பகுதியில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பிரச்சினையை தவிர்க்கும் வகையில், 2 பெண்களையும் திருப்பி அனுப்ப போலீசாருக்கு தேவசம் போர்டு அமைச்சர் கனகம்பள்ளி சுரேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, 2 பெண்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\