கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள்  பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுச்சாமி, மாடசாமி, ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி, பொறியாளர்கள் கிருஷ்ண குமார், சுப்பிரமணியன், புண்ணியமூர்த்தி மற்றும்  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேரை  முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உத்தரவிட்டார்.

இது  சட்டவிதிகளின் படியும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின் படியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரும் தகுதி வாய்ந்தவர்கள். பொது நிர்வாகப் பணிகளில் அனுபவம் பெற்று இருப்பவர்கள். உறுப்பினர்களின் தகுதி, பொது வாழ்வு பின்னணி, அனுபவம் போன்ற கூறுகளை சென்னை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். 11 பேர் நியமனத்தில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் பணிக்காலத்தை நிறைவு செய்யாத நீதிபதி எப்படி உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு புதிதாக 11 பேரை நியமிக்க வேண்டும், ஏற்கனவே பதவி வகித்தவர்களில் நீதிபதி ராமமூர்த்தி தவிர மற்றவர்கள் இப்பதவிகளுக்கு மனு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.