குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்
நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

தேசிய கொடியை ஏற்றிய குடியரசு தலைவர்
நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி கடமைப் பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. டெல்லியில் கடமைப் பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிய நிலையில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் தேசிய கொடி மீதும், பார்வையாளர்கள் மீதும் மலர் தூவப்பட்டது.
விருந்தினர்கள் பங்கேற்பு
இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாகனங்களின் அணிவகுப்பு
அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் படை வலிமையை பறைசாற்றும் வகையில் அர்ஜூன் டாங்கி உள்ளிட்ட பீரங்கிகள், ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், கவச வாகனங்கள், ராக்கெட் லாஞ்சர், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பாரம்பரிய முறையில் வந்து சேர்ந்த குடியரசு தலைவர்
முன்னதாக குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து சிறப்பு விருந்தினர்களுடன் வீரர்கள் புடைசூழ குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாரம்பரிய முறையில் சாரட்டு வண்டியில் வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவரை வரவேற்றார்.

