- Home
- இந்தியா
- விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!
விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!
விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வீரதீர செயல்களுக்கான விருது அறிவிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்

சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக் சக்ரா
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுக்கு, நாட்டின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருதான அசோக் சக்ரா வழங்கப்பட உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, 70 ஆயுதப்படை வீரர்களின் வீர தீரச் செயல்கள் மற்றும் தியாகத்தைப் பாராட்டி, அவர்களுக்கு வீரதீர விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்தப் பட்டியலில் மரணத்திற்குப் பின் வழங்கப்படும் ஆறு விருதுகளும் அடங்கும்.
வீரதீர செயல்களுக்கான விருது
இவற்றில் ஒரு அசோக் சக்ரா, மூன்று கீர்த்தி சக்ராக்கள், 13 சௌர்ய சக்ராக்கள் (ஒன்று மரணத்திற்குப் பின்), ஒரு பார் டு சேனா பதக்கம் (வீரதீரச் செயல்), 44 சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) (ஐந்து மரணத்திற்குப் பின்), ஆறு நவ் சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) மற்றும் இரண்டு வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) ஆகியவை அடங்கும்.
லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்
விருது பெறுபவர்களில் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த பலரும் அடங்குவர். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், மேஜர் அர்ஷ்தீப் சிங் மற்றும் நைப் சுபேதார் டோலேஷ்வர் சுப்பா ஆகியோர் தங்களின் முன்மாதிரியான சேவைக்காக கீர்த்தி சக்ரா விருதைப் பெறுவார்கள். லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் உத்தம் யுத் சேவா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 'ஆக்சியம் -4' திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோவின் ஆதரவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்றார்.
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த அவர் 18 நாட்கள் தங்கி, விண்வெளியின் நுண் ஈர்ப்பு விசை சூழலில் இஸ்ரோவால் அளிக்கப்பட்ட ஏழு முக்கியமான ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டார். தனது விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஜூலை 15 அன்று, 'டிராகன் கிரேஸ்' விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பினார்.

