காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த சில முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களை இங்கே காணலாம்.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பும் காஷ்மீரில் தொடர்ச்சியாக பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டுக்கும் பிறகு நடந்த சில முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

மார்ச் 21, 2000:

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சட்டிசிங்போரா கிராமத்தில் மார்ச் 21ஆம் தேதி இரவு சிறுபான்மை சீக்கிய சமூகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 2000:

நுன்வான் அடிவார முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 24 அமர்நாத் யாத்ரீகர்கள் உட்பட முப்பத்திரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஜூலை 2001:

2001ஆம் ஆண்டில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த முறை அனந்த்நாக்கில் உள்ள சேஷ்நாக் முகாமில், 13 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 1, 2001:

ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு & காஷ்மீர் மாநில சட்டமன்ற வளாகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.

2002:

2002இல், சந்தன்வாரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 11 அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன.

நவம்பர் 23, 2002:

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு காஷ்மீரின் லோயர் முண்டாவில் நடந்த ஒரு குண்டு வெடிப்புத் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் தாக்குதல்: துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி படம் வெளியீடு

மார்ச் 23, 2003:

புல்வாமா மாவட்டத்தில் உள்ள நந்திமார்க் கிராமத்தில் 11 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.

ஜூன் 13, 2005:

புல்வாமாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு அருகில் உள்ள சந்தையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் 2 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் மற்றும் 3 CRPF அதிகாரிகள் பலியானார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜூன் 12, 2006:

குல்காமில் நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பீகார் தொழிலாளர்களும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

ஜூலை 10, 2017:

குல்காமில் அமர்நாத் யாத்திரை பேருந்து ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதல்:

இந்தத் தாக்குதல்களைத் தவிர, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்தும் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் காஷ்மீரில் நடந்துள்ளன. குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். (CRPF) வீரர்கள் உயிரிழந்தனர்.

பஹல்காம் தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல்: உமர் அப்துல்லா கண்டனம்