சுதந்திரத்திற்குப் பிறகு புதிய பாராளுமன்றத்தில்.. இதுவே முதல் முறை.. பிரதமர் மோடி பெருமிதம்..
சுதந்திரத்திற்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
18-வது மக்களவையின் புதிய கூட்ட தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ 18வது மக்களவை இன்று தொடங்குகிறது. உலகின் மிகப் பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டது... சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசுக்கு சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால் இந்தத் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது பெருமைக்குரியது.” என்று கூறினார்.
மேலும் “பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு சிறப்புமிக்க நாள்...சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கு முன்பு வரை பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். எங்களுடைய நோக்கம் செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3-வது முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் நாட்டுக்கு சேவை செய்யவும் எம்.பிக்கள் பாடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நீட் தேர்வில் தப்பே நடக்கவில்லை என்று உருட்டிய அமைச்சர்... ஒரு வாரத்தில் சிபிஐ விசாரணை!
தொடர்ந்து பேசிய அவர் “ நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க, நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். மக்களுக்கு, நாடகமோ, தொந்தரவோ அல்லது கோஷங்களோ தேவையில்லை. நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்பான எதிர்க்கட்சி தேவை, இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என்று கூறினார்.
மேலும் “ "நாளை ஜூன் 25. இந்திய ஜனநாயகத்தின் மீது போடப்பட்ட கறையின் 50 ஆண்டுகளை ஜூன் 25 குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிந்ததை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டது... நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, இந்திய ஜனநாயகம், ஜனநாயக மரபுகளைக் காக்கும் அதே வேளையில், இனி இந்தியாவில் இதுபோன்ற செயலைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள் என்று நாட்டு மக்கள் தீர்மானம் எடுப்பார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சாதாரண மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை எடுப்போம்.” என்று வலியுறுத்தினார்.
புதிய சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் குறி வைக்கிறதா? சந்திரபாபு நாயுடு சொன்ன முக்கிய தகவல்..
தொடர்ந்து பேசிய அவர் “ அரசாங்கத்தை நடத்துவதற்கு பெரும்பான்மை தேவை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் நாட்டை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக எமக்கு வாய்ப்பளித்துள்ளனர். நமது பொறுப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளது... எனவே மூன்றாவது ஆட்சியில் மூன்று மடங்கு கடினமாக உழைத்து மூன்று மடங்கு பலன்களைப் பெறுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.