நீட் தேர்வில் தப்பே நடக்கவில்லை என்று உருட்டிய அமைச்சர்... ஒரு வாரத்தில் சிபிஐ விசாரணை!
நீட், நெட் தேர்வுகளில் முறைகேடுகளே நடக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான் சப்பை கட்டு கட்டிய நிலையில், இத்தேர்வுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் யுஜி NEET (UG) தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நீட் யூஜி தேர்வு 2024 தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து இன்று சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தேர்வு செயல்முறையின் வெளிப்படைத்தன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமை இரவு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
மே 5ஆம் தேதி 4,750 மையங்களில் நடைபெற்ற நீ்ட் யூஜி தேர்வை சுமார் 24 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விடைத்தாள் திருத்தம் முன்னதாகவே முடிந்துவிட்டதால், ஜூன் 4ஆம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதுநிலை நீட் தேர்வு திடீர் ரத்து! மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்
நீட் தேர்வு சர்ச்சை:
நீட் யூஜி தேர்வு முடிவுகள் வெளியானதும் தொடர்ந்து பல புகார்கள் எழுந்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வினாத்தாள் கசிவு பற்றிய குற்றச்சாட்டுகள் வந்தன. இதுவரை இல்லாத அளவுக்கு 67 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றது சந்தேகத்தைக் கிளப்பியது. 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. அந்த மாணவர்கள் விரும்பினால் ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம் என்றும் என்.டி.ஏ. கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டது.
இதனிடையே, ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற யூஜிசி நெட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் தொடர்பான சந்தேகம் எழுந்ததால் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சகம் கூறியது.
அதைத் தொடர்ந்து ஜூன் 25 முதல் 27 வரை நடைபெற இருந்த சி.எஸ்.ஐ.ஆர். யூஜிசி நெட் (CSIR - UGC NET) தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. பின்னர், இன்று நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் பிஜி (NEET PG) தேர்வும் நேற்று இரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. கடைசி நேரத்தில் தேர்வை ரத்து செய்ததால் தேர்வு எழுத விண்ணப்பித்த பலர் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.
தர்மேந்திர பிரதான் உருட்டு:
இவ்வளவு நடந்தும் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான் ஆரம்பம் முதலே எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சாதித்து வருகிறார். ஆனால், தொடர்ந்து பல தேர்வுகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, இப்போது சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
டிராபிக் போலீசை காருடன் தரதரவென்று இழுத்துச் சென்ற போதை ஆசாமி! வைரல் வீடியோ!