ரெயில் பெட்டிகளுக்கு மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்தல், ஒவ்வொரு பெட்டியிலும் தீ தடுப்பு கருவிகள் பொருத்துதல், ஊழியர்களுக்கு ‘புளுரோசென்ட்’ வண்ணத்தில் உடைகள் அளித்தல், உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை ரெயில்வே துறைக்கு உலக வங்கி வழங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரெயில் விபத்துகள் அதிகமாக நடந்து வருகின்றன.ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்தைக் காட்டிலும், தடம் புரண்டு நிகழும் விபத்துக்களும், ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது,  அடிப்பட்டு ஏராளமானோர்உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, உலக வங்கிக்கு கடிதம் எழுதி பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்க கேட்டு இருந்தார்.

பலநாடுகளில் கடைபிடிக்கப்படும் ரெயில்வே பாதுகாப்பு தொடர்பான முறைகளை ஆய்வு செய்து, ‘இந்திய ரெயில்வேயின் பாதுகாப்பை பலப்படுத்தும் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் அறிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன் ரெயில்வே துறை அமைச்சகத்திடம், உலக வங்கி அளித்தது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

ரெயில்வே துறையில் முதலில் செய்ய வேண்டியது, அனைத்து ரெயில்களிலும்பகலிலும் ஒளிரும் விளக்குகள்(டிட்ச் லைட்) முன்புறங்களில் பொருத்த வேண்டும். அனைத்து ரெயில்கள், ரெயில் பெட்டிகளில் தற்போது இருக்கும் வண்ணங்களை மாற்றிவிட்டு, மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் தொலைவில் ரெயில் வந்தாலும் பார்ப்பது எளிதாக இருக்கும்.

மேலும், ரெயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது, எச்சரிக்கை கோடுகளை வரைய வேண்டும். இதன்மூலம் தண்டவாளத்தை கடக்கும் போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வரும்.

தீ விபத்து ஏற்படும்போது தடுக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டியிலும் தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயில்கள் வரும்போது தாங்களை தனித்து காட்டுவதற்காக அவர்களுக்கு புளோரசென்ட் ஆடைகளை, ஒளிரும் ஆடைகளை வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு ‘காலில் பூட்ஸ்’, அல்லது காலணி, தலையில் பாதுகாப்பு கவசம், அவர்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

அதுமடடுமல்லாமல், வாரத்துக்கு 4 மணி நேரம் அனைத்து ரெயில் பெட்டிகள்,எஞ்சின்களை பராமரிப்பு செய்ய வேண்டும். விபத்து நேரத்தில் செயல்படும் வகையில் அவசர அழைப்பு தொலைபேசி எண்கள், பணியாளர்கள், மீட்பு கருவிகள் உள்ளிட்டவைகளை வைத்து இருக்க வேண்டும் என பாதுகாப்பு வழிமுறைகளை சர்வதேச அளவுக்கு பின்பற்ற அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.