கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, மே 17 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமல் செய்ததிலிருந்து நேற்று 5வது முறையாக மாநில முதல்வர்களை வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் சந்தித்து உரையாடியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்றைய சந்திப்பின் போது ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும், அதே நேரத்தில் மிக குறைந்த கட்டுப்பாடுகளே விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் சரியாக இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். கடந்த 4 மாதங்களாக கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருவதை சுட்டிக்காட்டினார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்த மோடி அவர்கள், கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் முக்கிய இடத்தில் உள்ளோம் என்பதையும் குறிப்பிட்டார். 

கொரோனாவுடன் போராடி உயிரிழப்பை தடுத்துக் கொண்டே மக்களை காத்து வருவதாக கூறினார். இதுபோன்ற வைரஸை இதுவரை பார்த்தோ, கேட்டதோ இல்லை என்று கூறிய பிரதமர், ஒரு வைரஸ் உலகத்தையே சின்னாபின்னமாக்கிவிட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். யாரையும் சாராமல் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியூட்டி வருவதை சுட்டிக்காட்டி பிரதமர், கொரோனாவுக்கு எதிரான போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும், இந்த போரில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.