நாட்டின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026 ஏப்ரலில் இரண்டு கட்டங்களாகத் தொடங்கவுள்ளது. இதற்காக, 2026 ஜனவரி 15-க்குள் கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாகத் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை 2026ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கணக்கெடுப்புப் பணிகள்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து மத்திய அரசு கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தகவல் அளித்தது. அதன்படி, கணக்கெடுப்புப் பணி பின்வரும் இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

முதல் கட்டம் (வீடுகள் கணக்கெடுப்பு): 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இரண்டாம் கட்டம் (மக்கள்தொகை கணக்கெடுப்பு): 2027ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல், முக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும்.

அதிகாரிகளை நியமிக்க உத்தரவு

இந்த நிலையில், களப்பணியாளர்கள் நியமனம் குறித்து இந்தியப் பதிவாளர் ஜெனரல் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  • சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-இன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்படலாம்.
  • கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட வேண்டும்.
  • மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.