ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் 6% வளர்ச்சி விகிதத்தை 8% ஆக உயர்த்துவதற்கான சவால்கள் மற்றும் கால அவகாசம் குறித்துப் பேசினார். மேலும், டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்ததற்குக் காரணத்தையும் அவர் விளக்கினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய தலைமைக்கான அதன் அபிலாஷைகள் குறித்து அண்மையில் வெளிப்படையான, அதேசமயம் விமர்சனப் பார்வையுடன் பேசியுள்ளார்.

டிசம்பர் 4 அன்று சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழகத்தின் UBS சமூகப் பொருளாதார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதை

தற்போது இந்தியாவில் நிலவும் பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கையான பார்வையை ரகுராம் ராஜன் எடுத்துரைத்தார். நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் சரியாக அமைந்தால், தற்போதுள்ள 6% வளர்ச்சி விகிதத்தை 8% ஆக உயர்த்த முடியும் என்று இந்தியர்கள் நம்புவதாகவும், இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற ஆதிக்கச் சக்திகளுக்கு இணையாக இந்தியா வளர முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த இலக்கை அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்தும் அவர் கூறினார். "இந்தியர்கள் இப்போதுள்ள 6% வளர்ச்சி விகிதம் 8% ஐ அடைய வேண்டும் என்று நம்புகிறார்கள். இது இந்தியாவை அமெரிக்கா மற்றும் சீனாவுடன் சமன் செய்ய அனுமதிக்கும். ஆனால், இதுபோன்ற வளர்ச்சி விகிதங்களுடன், அது நடக்க 15, 20 அல்லது 30 ஆண்டுகள் ஆகும்," என்று ரகுராம் ராஜன் கூறினார்.

மேலும், அவர் இந்தியாவின் தற்போதைய பொருளாதார அளவு குறித்து, "எனவே, இந்தியா இன்னும் மிகவும் சிறியதுதான்," என்றும் அழுத்தமாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50% கடுமையான வரியை (Tariff) விதித்ததற்கான காரணங்கள் குறித்தும் ரகுராம் ராஜன் இந்த மன்றத்தில் விளக்கமளித்தார். இந்த வர்த்தகப் பதற்றம், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியுடன் தொடர்பில்லாதது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான மாறிவரும் இராஜதந்திர உறவு குறித்துப் பேசிய அவர், 2025 மே மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார்.

அதில், சில நாட்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் (Ceasefire) தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உரிமை கோரினார். ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தம் "அவர் தலையீடு இல்லாமல் எட்டப்பட்டது" என்று திட்டவட்டமாக மறுத்தது. அதே சமயம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மூலம், டிரம்ப் சமாதானத்தை ஏற்படுத்த உதவியதாகக் கூறினார்.

இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ரகுராம் ராஜன், "பாகிஸ்தான் டிரம்பை சரியான வழியில் கையாண்டது. சமாதான ஒப்பந்தம் டிரம்பால் தான் ஏற்பட்டது என்று அவர்கள் கூறினர். இந்தியா, இந்த ஒப்பந்தம் அவர் தலையீடு இல்லாமல் எட்டப்பட்டது என்று கூறியது. இதன் விளைவு என்னவென்றால், பாகிஸ்தானுக்கு 19% வரியும், இந்தியாவுக்கு 50% வரியும் விதிக்கப்பட்டுள்ளது," என்று அவர் விளக்கினார்.