நாட்டில் மதத்தின் பெயரில் நடக்கும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. சாதி, வகுப்பு வாதம் ஆகியவை விஷம் போன்றது என்று டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த 71-வது சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 71-வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மற்றும் தலைவர்கள் வருகையையொட்டி பலத்தபாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

டெல்லி நகர் முழுவதும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியிலும், செங்கோட்டையில் 9,100 போலீசார், பாதுகாப்பு படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், வான்வழி கண்காணிப்பிலும் ஹெலிகாப்டர், விமானங்களும் ஈடுபட்டு இருந்தன.

டெல்லி செங்கோட்டையில் பிரமதர் மோடியின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர். காலை 7.30க்கு தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

என்னுடைய அரசு புதிய இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புதிய இந்தியாவில் ஊழல் இருக்காது, வன்முறை இருக்காது. மக்கள் சாதி, வகுப்பு வாத வேறுபாடுகள் இன்றி சமமாக வாழ்வார்கள்.

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறைகள் நிகழுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தேசத்துக்கு தேவை அமைதி மட்டுமே. சாதியமும், வகுப்புவாதமும் நமக்கு ஒருபோதும் உதவாது, அது விஷத்தைப் போன்றது.

காஷ்மீர் பிரச்சினைக்கும், அங்கு நிகழும் தொடர் வன்முறைக்கும் துப்பாக்கி தோட்டாக்களாலும், அத்துமீறல்கள் மூலமும் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அங்குள்ள குறிப்பிட்ட சில பிரிவிணைவாதிகள் மக்களை தூண்டிவிட்டு, பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். ஆனால், என்னுடைய அரசு காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் ஒரு சொர்க்கபுரியமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

தீவிரவாதத்தைப் பொருத்தவரை இந்த அரசு எந்தவிதமான மென்மையான போக்கையும் கடைபிடிக்காது. பாதுகாப்பு மட்டும அரசின் பிரதான முன்னுரிமையாகும். நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் வன்முறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.  நான் காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு மீண்டும் கூறுகிறேன், தேசிய நீரோட்டத்துக்கு வாருங்கள், ஜனநாயகத்தில் உங்களுக்கு பேசுவதற்கு உரிமை இருக்கிறது.

பேரழிவுகளான மழைவெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றில் தோழோடு தோள்கொடுத்து, உதவ வேண்டும். மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்டகுழந்தைகள் இறந்துள்ளனர். இந்த தருணத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

என்னுடைய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்டரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஜி.எஸ்.டி. சட்டத்தால் வர்த்தகம் செய்வது எளிதாகியுள்ளது.

நாட்டையும், ஏழைகளையும் கொள்ளையடித்தவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஊழல், கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.

ரூபாய் நோட்டு தடை காலத்தில் ரூ.1.75 லட்சம் கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். வங்கிசெயல்பாட்டு முறைக்கு ரூ. 3 லட்சம் கோடி கணக்கில் வராத பணம் கொண்டுவரப்பட்டுள்ளது.

4.50 லட்சம் பேர் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்,  ஒரு லட்சம் பேர் வருமானவரியே செலுத்தாதவர்கள். இதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் கொடுக்கும், அதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

ஜி.எஸ்.டி.வரிச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டதால், சரக்கு லாரிகள் போக்குவரத்து நேரம் 30 சதவீதம் குறைந்துள்ளது, இதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.