காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், வீர் சாவர்க்கர் பெயரில் வழங்கப்படும் விருதை ஏற்க மறுத்துள்ளார். விருது மற்றும் அதை வழங்கும் அமைப்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் இந்துத்துவத் தலைவர் வீர் சாவார்க்கர் பெயரில் வழங்கப்படும் விருதை ஏற்க மறுத்துள்ளார். இந்த விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், விருது தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாததைக் காரணம் காட்டி, அந்த விருதைத் தான் ஏற்கவோ, விழாவில் கலந்துகொள்ளவோ மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வீர சாவர்க்கர் குறித்த காங்கிரஸின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராக, சசி தரூர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது, கட்சிக்குள் மற்றொரு சர்ச்சையை உருவாக்கும் அபாயம் நிலவிய நிலையில், அவரது இந்த மறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விருது நிகழ்வில் தனது பங்கேற்பு குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் கலந்துகொள்ளப் போவதில்லை" என்று அவர் முதலில் சுருக்கமாகப் பதிலளித்தார். பின்னர், தனது முடிவைச் சமூக வலைத்தளத்தில் தெளிவுபடுத்தினார்.

சசி தரூர் பதிவு

"விருதின் தன்மை, அதை வழங்கும் அமைப்பு அல்லது வேறு எந்தச் சூழல் சார்ந்த விவரங்கள் குறித்தும் தெளிவான விளக்கங்கள் இல்லாத நிலையில், நான் இன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அல்லது விருதை ஏற்றுக்கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை."

'வீர சாவர்க்கர் சர்வதேச தாக்க விருது 2025' (Veer Savarkar International Impact Award 2025) என்ற விருதை, எச்.ஆர்.டி.எஸ் (HRDS) என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் நிறுவியுள்ளது. சசி தரூர் தான் அதன் முதல் பெறுநராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

தேசிய வளர்ச்சி, சமூக சீர்திருத்தம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் மாற்றத்திற்காக உழைத்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது இன்று புது டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. மாநாட்டு அரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அமைப்பாளர்களுக்கு கண்டனம்

சசி தரூர், தான் கேரளாவில் இருந்தபோதுதான் ஊடகச் செய்திகள் மூலம் இந்த விருது குறித்து அறிந்ததாகவும், விருது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அதனைத் தான் ஏற்கவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தனது பெயரைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன் தன்னிடம் சரிபார்க்காத அமைப்பாளர்களை விமர்சித்த அவர், "நான் அதை ஏற்க ஒப்புக்கொள்ளாத நிலையிலும் எனது பெயரை அறிவித்தது அமைப்பாளர்களின் பொறுப்பற்ற செயலாகும்," என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் யாரும் வீர சாவர்க்கர் பெயரில் ஒரு விருதை ஏற்க மாட்டார்கள் என்று அவரது சக கட்சித் தலைவர்கள் நம்பிய நிலையில், டெல்லியில் உள்ள சில ஊடகங்கள் தொடர்ந்து அவரிடம் இதே கேள்வியைக் கேட்பதாகவும் சசி தரூர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.