ரஷ்ய அதிபர் புடினுக்கான அரசு விருந்தில் சசி தரூர் பங்கேற்கிறார், ஆனால் ராகுல் காந்தி மற்றும் கார்கே அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்வு, பிரதமர் மோடியைப் பாராட்டி வரும் தரூருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையேயான பிளவை மேலும் அதிகரித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு அளிக்கப்படும் அரசு விருந்தில் (State Dinner) காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்கிறார். ஆனால், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்த விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைக் காலமாக, சசி தரூர் பாஜகவில் இணைவார் என்று ஊகங்கள் நிலவிவரும் நிலையில், அவர் இந்த விருந்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். வெளியுறவுத் துறைக்கான நிலைக்குழுவின் தலைவராக இருப்பதால், தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாட்டின் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இதேபோன்ற மரியாதை அளிக்கப்படாதது குறித்து சசி தரூர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். "அரசு விருந்துகளுக்கான அழைப்பிதழ் நடைமுறைகள் குறித்து எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் விமர்சனம்
புடினின் இந்திய வருகைக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதைத் தற்போதைய மத்திய அரசாங்கம் ஊக்கப்படுத்துவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
“வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பது என்பது, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட மரபு. ஆனால், இப்போது... வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க வேண்டாம் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது..." என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு சசி தரூர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாக, கருத்து கூறியுள்ளார். "எதிர்க்கட்சித் தலைவர் (LoP) தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்," என அவர் கூறினார்.
காங்கிரஸ் vs சசி தரூர்
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு சசி தரூர் மறைமுகமாக ஆதரவளித்தாலும், சமீப காலமாகப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி அவர் வெளியிட்ட கருத்துக்களால் காங்கிரஸுக்கும் அவருக்குமான பிணக்குத் தொடர்ந்து நீடிக்கிறது.
கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் கையாண்ட விதம் குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த இராணுவத் தாக்குதல்கள் குறித்தும் அவர் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியது காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த மாதத் தொடக்கத்தில், 'இந்திய அரசியல் ஒரு குடும்பத் தொழில்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சசி தரூர் எழுதினார். அதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அவர் வாரிசு அரசியல் செய்வதாகக் கடுமையாக விமர்சித்திருந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2022-ஆம் ஆண்டின் மத்தியில், காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய தலைவர்கள் குழுவில் சரி தரூர் இடம்பெற்றிருந்தார். அதிலிருந்து அவருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே பிளவு அதிகரித்து வருகிறது.


