பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத், மக்களவையில் பிரதமர் மோடி EVM-களை அல்ல, மக்களின் இதயங்களையே ஹேக் செய்ததாகக் கூறி ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பிரேசிலிய மாடலின் அவர் மன்னிப்பு கேட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பற்றி தொடர்ந்து புகழ்ந்து வரும் பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத், இன்று மக்களவையில் தனது பாராட்டை மேலும் ஆழமாகப் பதிவு செய்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் இருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசினார்.

இதயங்களை ஹேக் செய்த மோடி

ராகுல் காந்தி சுமார் ஒரு வருட காலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திரும்பத் திரும்ப முன்வைத்து வரும் EVM மோசடி குற்றச்சாட்டுகளை கங்கனா முற்றிலும் நிராகரித்தார்.

“காங்கிரஸ்காரர்ளுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்... பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) ஹேக் செய்யவில்லை, அவர் மக்களின் இதயங்களை ஹேக் செய்துள்ளார்!” என கங்கனா கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மிகப்பெரிய விஷயத்தை வெளிப்படுத்துவார் என்று தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது பெரிய சத்தமாக மட்டுமே இருந்தது என்றும் கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சலுகைகள் நிறைந்த வாழ்வுக்கே பழகிவிட்டவர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

மன்னிப்பு கேட்ட கங்கனா

செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி, ஹரியானா வாக்காளர் பட்டியலில் ஒரு பிரேசிலிய மாடலின் புகைப்படங்கள் 22 முறை வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டார். "ஹரியானா தேர்தல் திருடப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

அப்போது ராகுலுக்குப் பின்னால் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினர்.

இதை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்மார். பிரேசிலிய மாடல் லாரிசா நெரியின் (Larissa Nery) தான் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.

"ஒரு பெண்ணாக, ஒவ்வொரு பெண்ணும் கண்ணியமாக நடத்தப்படுவதற்கு உரிமை உடையவர்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) இவருடைய படத்தை வெளியிட்டுள்ளனர். இது தனியுரிமை மீறல். இந்த மாமன்றத்தின் சார்பாக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று கங்கனா பேசினார்.

மேலும், லாரிசா நெரி, தான் ஒருபோதும் இந்தியாவிற்கு வந்ததில்லை என்று பலமுறை தெளிவுபடுத்தி இருப்பதை கங்கனா சுட்டிக்காட்டினார்.

தீவிர மோடி ஆதரவாளர் கங்கனா

எம்.பி.யான முதல் வருடத்திலேளயே கங்கனா ரணாவத், பிரதமருக்கு ஆதரவாகப் பேசும் முன்னணி நபராக மாறியுள்ளார்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் ஒரு மகளிர் பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது, தான் சந்தித்தவர்களிலேயே மோடிதான் மிகப்பெரிய பெண்ணியவாதி என்று கூறினார். “அவர் பெண்களுக்காக இத்தனை விஷயங்களைச் செய்ததாக ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. அவர் ஒரு அமைதியான பெண்ணியவாதி,” என்று அவர் புகழ்ந்தார்.

தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், மோடியை கடவுளின் அவதாரம் என்றும் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபரில் நடந்த ஒரு ஃபேஷன் நிகழ்வில், மோடியின் ஸ்டைலை வெகுவாகப் பாராட்டினார். "அவரிடம் சிறந்த ஸ்டைல் உள்ளது. அவர் அரசியலில் மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் மிகுந்த விழிப்புணர்வு கொண்டவர். இந்தியத் தொழில்கள் மற்றும் இந்திய மக்கள் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்," என்று கங்கனா கூறினார்.