ஒடிசா கோயில் திருடிய கிருஷ்ணரின் நகைகளை 9 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கடிதத்துடன் திருடன் திருப்பி கொடுத்துள்ளார்.

ஒடிசாவின் கோபிநாத்பூரில் உள்ள கோபிநாத் கோவிலில் பகவான் கிருஷ்ணரின் நகைகள் கடந்த 2014-ம் ஆண்டு திருட்டு போனது. அந்த நகைகள் கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு சொந்தமானது என்றும் பல லட்சம் மதிப்புடையது என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க :கார் ஏசி சரியா வேலை செய்யலையா? குளிர்ச்சியை மேம்படுத்த உதவும் எளிய ட்ரிக்ஸ் இதோ..

இந்த நிலையில் கிருஷ்ணரின் திருடிய திருடன், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றைத் திருப்பி கொடுத்துள்ளார். சமீபத்தில் பகவத் கீதையைப் படித்து, தனது தவறை உணர்ந்ததாக அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் தனது மன்னிப்பு கடிதத்தில் “ 2014-ம் ஆண்டு யாகசாலையில் (யாகம் நடக்கும் இடத்தில்) ஒரு யாகத்தின் போது, ஆபரணங்களை எடுத்துச் சென்றிருந்தேன்.

ஆனால் இந்த 9 வருடங்களில் நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அந்த நகையை திருடியதில் இருந்து எனக்கு கெட்ட கனவுகளாக வருகின்றன. எனவே அந்த நகைகளை திருப்பி ஒப்படைக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோயில் நிர்வாகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. பகவான் கிருஷ்ணரின் நகைகள், காதணிகள், வளையல்கள் மற்றும் புல்லாங்குழல் கொண்ட பை ஆபரணங்களை கோவிலின் முன் வாசலில் விட்டுவிட்டு சென்றதாக கோவில் பூசாரி ஸ்ரீ தேபேஷ் சந்திர மொஹந்தி தெரிவித்துள்ளார். மேலும் ஆபரணங்களுடன் கூடுதலாக 300 ரூபாயை பரிகாரமாக விட்டுச் சென்றுள்ளார், கிருஷ்ணரின் போதனைகளால் மனம் நெகிழ்ந்த திருடன், திருடப்பட்ட நகைகளை கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட நகைகள் திரும்ப கிடைத்திருப்பது கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடனின் மனவருத்தம் மற்றும் கிருஷ்ணரின் போதனைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தது பகவத் கீதையின் சக்திக்கு சான்றாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகிறாரா? தீயாக பரவும் தகவல்.. இலங்கையில் என்ன நடக்கிறது?