புதிய ரூ.500 நோட்டுகள் முழுமையாக புழக்கத்துக்கு வர 6 மாத காலம் ஆகும். ஆனால், இதனை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 8ம் தேதி இரவு மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பால் சாதாரண மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாகவே உள்ளது.
பணத்தை மாற்றுவதற்காக வந்தவர்களில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை போலவே வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 12 முதல் 14 மணி நேரம் ஓய்வில்லாமல் வேலை செய்கின்றனர். இந்நிலை எப்போது மாறுமோ? என்ற ஏங்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய ரூ.500 நோட்டுகள் வந்துவிட்டது என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சேலத்தில் தனியார் வங்கி ஒன்றை தவிர மற்ற இடங்களில் இதுவரை புதிய 500 ரூபாய் நோட்டுகள் வரவில்லை. மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இந்த 4 இடங்களில் ஒரே நேரத்தில் 3 ‘ஷிப்ட்’ அடிப்படையில் 24 மணி நேரமும் அச்சடிக்கப்பட்டால் கூட முழுவதுமாக மக்களுடைய புழக்கத்துக்கு வர குறைந்தது 5 அல்லது 6 மாத காலம் ஆகும். இதை வைத்து பார்க்கும்போது நமக்கு தேவையான புதிய ரூ.500 நோட்டுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில்தான் கிடைக்கும் என்பது தான் உண்மை.
இந்த உண்மையை மக்களிடம் சொல்லவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது. அவர்கள் தேவையான நோட்டுகள் கையிருப்பில் உள்ளது என்று மாயையான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வங்கி ஊழியர்களையும், பொதுமக்களையும் நேர்எதிரே நிறுத்தும் மோசமான முயற்சியை செய்ய பார்க்கிறார்கள்.
258 பிக் பஜார்களில் ரூ.2,000 ஆயிரம் வரை நோட்டுகள் சப்ளை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த பணம் எங்கிருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கொடுத்துவிட்டார்களா?. இதே அறிவிப்பை எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செய்யலாமே? இது எந்த உள்நோக்கத்துக்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருப்பு பணத்தின் உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளாமல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எவ்வித பலனும் தராது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கள்ள பணத்தை ஒழித்துவிடும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.
தேசிய புலனாய்வு நிறுவனத்தின் சார்பில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, மொத்த பணத்தில் கருப்பு பணம் என்பது ரூ.400 கோடி தான். அதாவது செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளின் மொத்த மதிப்பான ரூ.14.18000 ஆயிரம் கோடி மதிப்பில் இது வெறும் 0.028 சதவீதம் மட்டும் தான்.
இதுவரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் பணி மட்டும் தான் நடைபெற்று வருகிறது. இதனால் 3வது காலாண்டில் வங்கிகள் அனைத்தும் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும். இதை ஒரு காரணமாக வைத்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்யும்.
கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர இந்த அரசாங்கத்துக்கு எந்த அரசியல் உறுதியும் இல்லை. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று இந்த அரசாங்கத்தின் முடிவு கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிப்பதற்காகத்தான் என்று நம்புவது கடினமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
