மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் தனது வாக்குகுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி, மக்கள் விரும்புவது ‘‘உண்மையான இந்தியா’’ என்று கூறினார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் போட்டி பிரிவு தலைவரான சரத் யாதவ் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

 ‘‘மேக் இன் இந்தியா’’ திட்டத்தை பா.ஜனதா அரசு முன்னோடி திட்டமாக அறிவித்து இருக்கிறது. ஆனால், சீனாவில் உற்பத்தி செய்யும் பொருட்கள்தான் நமது நாட்டில் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

பிரதமர் மோடி, தூய்மையான இந்தியாவை உருவாக்க விரும்புவதாக கூறி வருகிறார். ஆனால், மக்கள் உண்மையான இந்தியாவைத்தான் விரும்புகிறார்கள். மோடி எங்கு சென்றாலும் பொய் பேசி வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பா.ஜனதா அரசால் நிறைவேற்ற முடியவில்லை. அவற்றில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற வாக்குறுதிகளாகும்’’.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை வளைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அது குறித்து அவர் கூறியதாவது-

 ‘‘பா.ஜனதாவின் ‘காவிக்கர’மான ஆர்.எஸ்.எஸ். ஜாதியின் பெயரால் இந்தியாவை துண்டாட நினைக்கிறது.

‘‘இந்த நாடு எங்களுடையது. நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல’’ என ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. அப்படிக் கூறி, குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்படுகிறார்கள். அரசியல் சட்டத்தையே மாற்ற முயற்சிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

விவசாயக் கடன்களை ரத்து செய்வது இந்த அரசின் கொள்கை அல்ல என்று, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் கூறுகிறார். நாட்டில் எத்தனை விவசாயிகள் இறக்கிறார்கள் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்ல.’’

இவ்வாறு அவர் கூறினார்.

 ‘நாட்டின் பன்முக கலாசாரத்தை காப்போம்’ என்ற பெயரில், அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரசின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.