பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து, முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி தேவை எனப் பேசியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி டாக்டர் நவ்ஜோத் கவுர் சித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.500 கோடி அடங்கிய சூட்கேஸைக் கொடுப்பவரே முதலமைச்சராக முடியும் என்று பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தன. அதைத் தொடர்ந்து நவ்ஜோத் கவுர் சித்து மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"முதல்வர் பதவிக்குக் கொடுக்கப் பணம் இல்லை"

பஞ்சாபில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவர் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவார் என்று நவ்ஜோத் கவுர் சித்து சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர், "நாங்கள் எப்போதும் பஞ்சாப் மற்றும் பஞ்சாபியத்தைப் பற்றித்தான் பேசுகிறோம்... ஆனால் முதலமைச்சர் நாற்காலியில் அமர எந்தக் கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களிடம் ரூ.500 கோடி இல்லை. இருப்பினும், எங்களால் பஞ்சாப்பை 'தங்க மாநிலமாக' மாற்ற முடியும்" என்று கூறினார்.

உங்களிடம் யாராவது பணம் கேட்டார்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எங்களைப் பொறுத்தவரை அதுவல்ல நிலைமை, ஆனால் ரூ.500 கோடி அடங்கிய சூட்கேஸைக் கொடுப்பவரே முதலமைச்சராகிறார்" என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

Scroll to load tweet…

"என் பேச்சைத் திரித்துவிட்டனர்"

தனது இந்தக் கூற்று அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், நவ்ஜோத் கவுர் சித்து தனது கருத்தைத் திரித்துக் கூறப்பட்டுவிட்டதாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

"காங்கிரஸ் கட்சி எங்களிடம் எதையும் கோரவில்லை என்று கூறினேன். அந்த நேரடியான கருத்துக்குத் திரித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வேறு எந்தக் கட்சியிலாவது நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் வேட்பாளர் ஆவாரா என்று கேட்கப்பட்டபோது, முதல்வர் பதவிக்காகக் கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை என்று கூறினேன்," என்று அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் நிலவுவதாகவும் கட்சிக்குள் பணம் விளையாடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட இந்தக் கருத்து ஒரு முக்கிய ஆயுதமாக மாறிவிட்டது. இதனால்தான் கட்சித் தலைமை உடனடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.