கடலோரப் பகுதியை கண்காணிக்க இந்திய அரசு `வருணா' என்ற நவீன ரோந்துக் கப்பலை இலங்கைக்கு வழங்கியது.

கொச்சி கடற்படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில் இலங்கைக்கு இந்த கடலோர கண்காணிப்பு கப்பலை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இலங்கையின் கடற்படை கடல்எல்லைப் பாதுகாப்புத்துறை அதிகாரி அட்மிரல் சமந்த விமலதுங்காவிடம் இந்திய கடல் எல்லைப்பாதுகாப்பு இயக்குனர் ராஜேந்திர சிங் இந்த கப்பலை முறைப்படி வழங்கினார்.

இலங்கைக்கு இந்த வருணா கப்பலை அனுப்பிவைப்பதற்கு முன்னதாக இலங்கை கடற்படையினருக்கு இந்த கப்பலை இயக்குவது பற்றியும் கண்காணிப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் இந்திய கடலோரக் காவல் படையினர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த விழாவில் பேசிய இந்திய கடலோர காவல் படை தலைவர் ராஜேந்திர சிங், இந்த கடலோர ரோந்துக் கப்பலை இலங்கைக்கு வழங்குவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என தெரிவித்தார். இது இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் உதவும் என்றார்.

வருணா கடலோர ரோந்துக் கப்பலை வழங்கியதற்கு இலங்கை கடலோரக் காவல் படை தலைவர் சமந்த விமலதுங்கா இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைகடற் படையினர் தாக்கி சித்தரவதைப் படுத்தி சிறைப்பிடித்துச்செல்வது அதிகரித்துவரும் நிலையில், இலங்கை கடற்படையின் பலத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த வருணா கடல் கண்காணிப்பு கப்பலை இந்தியா வழங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த வருணா கடலோரக் கண்காணிப்பு கப்பல் இலங்கை கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ளதானது கடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களுக்கு மேலும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இலங்கை கடற்படையில் பிரமாண்டமான கடல் கண்காணிப்பு கப்பல் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.