பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் பசுக் குண்டர்கள் மீது கட்டாயமாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபின்பு பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித் சமூகத்தினர், முஸ்லிம் மக்கள் மீது பசுக் குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போன்ற தாக்குதல்கள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்து, கண்டிப்பான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துப் பேசினார். அவர் பேசியதாவது-

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதும், கால்நடை வர்த்தகர்களின் உயிரையும், உடைமைகள், மாட்டிறைச்சி உண்போர், முஸ்லிம்கள், தலித்கள், பண்ணை விவசாயிகள் உள்ளிட்டோரை காப்பது மாநில அரசுகளின் கடமையாகும்.

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிலர் சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் மீது மாநில அரசுகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.