இந்தியாவில் 7 ஆயிரத்தைக் கடந்த கருப்பு பூஞ்சை தொற்று... அதிக பாதிப்பு எங்கு தெரியுமா?
இந்தியா முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதிதாக பெருகி வரும் கருப்பு பூஞ்சை தொற்று மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கட்டுப்பாட்டில் இல்லாத நீரழிவு நோயாளிகளை கரும்பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் எச்சரித்துள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், டெல்லி, ஆந்திரா, கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பலரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்ட்டிராவில் மட்டும் கருப்பு பூஞ்சை தொற்றால் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 90 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஹரியானா உள்ளது. இங்கு கருப்பு பூஞ்சை தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பீகார், உத்தரகாண்ட், அஸ்ஸாம், ஒடிசா, கோவாவில் தலா ஒரு நபரும் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.